Paristamil Navigation Paristamil advert login

ஸ்வீட் கார்ன் வடை

ஸ்வீட் கார்ன் வடை

18 பங்குனி 2024 திங்கள் 12:00 | பார்வைகள் : 615


ஸ்வீட் கார்ன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்வீட் கார்னை வேகவைத்து அல்லது சுட்டு சாப்பிட விரும்புவார்கள். ஆனால் ஸ்வீட் கார்னை வைத்து மாலை நேர சிற்றுண்டிற்காக சுவையான வடையை எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் - 2

அரிசி மாவு - 1 கப்

கடலை மாவு - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 1

கேரட் - 1

குடை மிளகாய் - 1/2

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 6 பல்

இஞ்சி - சிறு துண்டு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்

உலர் மாம்பழ தூள் - 1 டீஸ்பூன்

சீரக தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் சோளத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சுமார் 10 - 15 நிமிடங்களுக்கு வேக வைத்து கொள்ளுங்கள்.

பின்பு சோளத்தை மட்டும் தனியாக பிரித்து ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து வேகவைத்த சோள விதைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் கொரகொரப்பான பதத்திற்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து கொள்ளவும்.

அதன் பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி அரைத்த சோளத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.

அதேபோல் கேரட்டையும் நைசாக துருவி அதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொள்ளுங்கள்.

பின்னர் அதில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், உலர் மாம்பழ தூள், சீரக தூள், பெருங்காய தூள், கரம் மசாலா மற்றும் உப்பை சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடங்களுக்கு மூடி வைத்து ஊற விடவும்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவி வடை மாவிருந்து சிறிதளவு எடுத்து உங்களுக்கு தேவையான அளவில் வடையாக ஒரு தட்டி எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை குறைத்து கொள்ளுங்கள்.

தற்போது நாம் தட்டி வைத்துள்ள வடையை பொறுமையாக ஒன்றன் பின் ஒன்றாக போட்டு கொள்ளுங்கள்.

வடை ஒருபுறம் வெந்ததும் அதை மறுபுறம் திருப்பி போட்டு நன்றாக வேகவிடவும்.

வடை முழுவதும் நன்கு வெந்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும்.

வடை நன்கு பொன்னிறமாக மொறுமொறுவென்று வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சட்னியுடன் சேர்த்து அனைவருக்கும் பரிமாறவும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்