Paristamil Navigation Paristamil advert login

தமிழர்களின் ஓட்டுரிமை வீண் முதல்வர் மவுனம் காப்பது ஏன்? தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி

தமிழர்களின் ஓட்டுரிமை வீண் முதல்வர் மவுனம் காப்பது ஏன்? தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி

25 சித்திரை 2024 வியாழன் 02:57 | பார்வைகள் : 633


எல்லாவற்றிற்கும் தமிழர்களின் உரிமை, தமிழர் உரிமை என்று பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பல லட்சக்கணக்கான தமிழர்களின் ஓட்டுரிமை வீணாகப் போனதற்கு, மவுனம் காப்பது ஏன்?'' என தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பினார்.

பா.ஜ.,முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், கோவை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பல லட்சம் வாக்காளர்களின் ஓட்டளிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் ஆராய்ந்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கும் பணிகளை மேற்கொண்ட அரசு பணியாளர்களால், குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒருவரது வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கக் கூடாது.

எல்லாவற்றிற்கும் தமிழர் உரிமை, தமிழர் உரிமை என்று பேசும் முதல்வர் ஸ்டாலின், பல லட்சக்கணக்கான தமிழர்களின் ஓட்டுரிமை வீணாகப் போனதற்கு, எதுவும் பேசாமல் மவுனம் காப்பது ஏன்?இந்த குழப்பங்களுக்கு, தி.மு.க.,வினர் தான் காரணம் என்று சந்தேகம் எழுகிறது.

பிரதமர் மோடி, எந்தவித மத பாகுபாடுமின்றி அனைவருக்குமான வளர்ச்சியையும், திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். 10 கோடி பேருக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீதம் பேர், முஸ்லிம் மக்கள். அதே போல, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏராளமான முஸ்லிம் மக்கள் பலனடைந்துள்ளனர்.

ஆனால் காங்., கட்சி, சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை, ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. அவர்களது முன்னேற்றத்திற்கான பணிகளை செய்யவில்லை. காங்., தாங்கள் மட்டுமே, சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என, பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது.

நாட்டின் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களிடம் மட்டுமே சென்று விடக் கூடாது என, மோடி பேசி உள்ளார். இதை சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என காங்., பொய் பிரசாரம் செய்து வருகிறது.

தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவோம். ஸ்டாலின் வடநாட்டிற்கு சென்றால் ஹிந்தி எதிர்ப்பு, சனாதனம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். தி.மு.க.,வில் உதயநிதிக்கு வழங்கும் முக்கியத்துவத்தை, உழைக்கும் கட்சியினருக்கு கொடுப்பதில்லை.

இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு, பிரதமர் மோடிக்கு உள்ளது. முத்தலாக் சட்டம் கொண்டு வந்து, பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்ணுரிமை குறித்து பேசி வருகிறார். ஆனால், முஸ்லிம் பெண்கள் தனியாக, ஹஜ் யாத்திரை செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் பிரதமர் மோடி, விசா நடவடிக்கைகளை தளர்த்தி முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்வதற்கு, வழிவகை செய்து உள்ளார். அலிகார் பல்கலையில், இதுவரை முஸ்லிம் பெண்கள் துணைவேந்தராக இருந்ததில்லை. தற்போது நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்